Thursday, July 4, 2013

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு:சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது!

அஹ்மதாபாத்:இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகளை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலைச் செய்த வழக்கில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.நேற்று அஹ்மதாபாத் கூடுதல் ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த முதல் குற்றப்பத்திரிகையில் குஜராத் போலீஸ் நடத்திய என்கவுண்டர் போலி என்று சி.பி.ஐ குறிப்பிட்டுள்ளது.மேலும் இஷ்ரத் ஜஹான் தீவிரவாதி அல்ல என்றும் குற்றப்பத்திரிகை கூறுகிறது.
இஷ்ரத் ஜஹான், கேரளாவைச் சார்ந்த ஜாவேத் ஷேக்(முந்தைய பெயர் பிராணேஷ் பிள்ளை), அம்ஜத் அலி ராணா, ஸீஷன் ஜோஹார் ஆகியோரை கடத்திச் சென்று சட்டவிரோதமாக
காவலில் வைத்து பின்னர் கொடூரமாக குஜராத் போலீஸ் கொலைச் செய்துள்ளதாக சி.பி.ஐ குற்றப்பத்திரிகையில் தெளிவுப்படுத்தியுள்ளது.குஜராத் போலீஸ், இண்டலிஜன்ஸ் பீரோவின் குஜராத் யூனிட் ஆகியோர் இணைந்து சதித்திட்டம் தீட்டி இந்த போலி என்கவுண்டரை நடத்தியுள்ளதாக சி.பி.ஐ கூறுகிறது.
மஹாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டம், மும்ப்ரா பகுதியைச் சேர்ந்தவர் இஷ்ரத் ஜஹான்(19). இவர் கல்லூரி மாணவி, மேலும் இவர் தனது குடும்பத்தினரின் செலவுக்காக டியூசன் வகுப்புகளை நடத்தி வந்தார். இவரும், ஜாவேத் ஷேக் என்ற பிராணேஷ் பிள்ளை, அம்ஜத் அலி ராணா, ஸீஷன் ஜோஹர் ஆகியோரும் கடந்த 2004, ஜூனா 15இல் அஹ்மதாபாத்தின்  புறநகர்ப்பகுதியில் குஜராத் போலீஸார் நடத்திய போலி என்கவுண்டரில்  சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நான்கு பேரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல சதி செய்ததாகவும் மத்திய உளவுத்துறையிடம் இருந்து தகவல் கிடைத்ததாக குஜராத் போலீஸார் தெரிவித்தனர். எனினும், தனது மகள் அப்பாவி என்றும் அவரை போலீஸார் போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்று விட்டதாகவும் இஷ்ரத் ஜஹானின் தாயார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த என்கவுன்ட்டர் குறித்து விசாரிக்கும் பொறுப்பு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ., அஹ்மதாபாத் கூடுதல் தலைமை ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் எச்.எஸ்.குட்வாட் முன்பு புதன்கிழமை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதில் சி.பி.ஐ. தெரிவித்திருப்பதாவது: இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லவே வந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அவர்களை என்கவுன்ட்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்வதற்கான சதித் திட்டத்தை குஜராத் காவல்துறையின் கூடுதல் டி.ஜி.பி. பாண்டே, டி.ஐ.ஜி. வன்சாரா மற்றும் ராஜீந்தர்குமார் ஆகியோர் தீட்டினர். அதைத் தொடர்ந்து, குஜராத்தின் வாசாத் பகுதியில் இருந்து இஷ்ரத் ஜஹானையும் ஜாவித் ஷேக்கையும் காவல்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளான அமீனும், பரோட்டும் 2004 ஜூன் 12ஆம் தேதி தங்கள் காவலில் எடுத்தனர். அவர்களுக்கு ஐ.பி. உளவு அமைப்பின் அதிகாரிகளான எம்.கே.சின்ஹாவும், ராஜீவ் வான்கடேவும் உதவினர்.
இஷ்ரத்தையும், ஜாவித் ஷேக்கையும் அஹ்மதாபாதின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஐ.பி. அதிகாரி ராஜீந்தர்குமார் விசாரித்தார். மறுநாள், இந்த இருவரிடமும் வன்சாரா, பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, அம்ஜதலி  ராணா, ஸீஷன் ஜோஹர் ஆகிய இருவரும் அஹ்மதாபாதுக்கு போலீஸாரால் அழைத்து வரப்பட்டனர். நால்வரையும் அஹ்மதாபாதின் புறநகர்ப் பகுதியில் சாலையில் நிற்க வைத்து, போலீஸார் சுட்டனர். இதில் நால்வரும் இறந்தனர்.
பின்னர், 4 பேரின் உடல்கள் மீதும் ஏ.கே.47 ரக துப்பாக்கியையும், 9 எம்.எம்.ரக கைத்துப்பாக்கிகளையும் வைத்து விட்டனர். இந்த ஆயுதங்களை குஜராத் போலீஸ் அதிகாரி சிங்கால் ஏற்பாடு செய்து கொடுத்தார்.எனவே, இந்த என்கவுண்டர் ‘போலி‘ என்பது உறுதியாகிறது. இது, திட்டமிட்ட படுகொலை. குஜராத் போலீசாரும், அம்மாநில உளவுப்பிரிவும் இணைந்து செய்த வேலை. எங்கள் விசாரணையில், 7 போலீஸ் அதிகாரிகள் மீதான குற்றம் நிரூபணம் ஆகியுள்ளது.கொல்லப்பட்ட 4 பேரும் மோடியை கொல்ல வந்தனர் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள குஜராத் காவல்துறையைச் சேர்ந்த பாண்டே, வன்சாரா, ஜி.எல்.சிங்கால், தருண் பரோட், என்.கே.அமீன், ஜே.ஜீ.பார்மர், அனாஜு சௌதரி ஆகிய 7 அதிகாரிகளும் குற்றம் இழைத்திருப்பது எங்கள் புலனாய்வில் உறுதியாகியுள்ளது. இந்த விவகாரத்தில், மாநில உளவுப்பிரிவு இணை இயக்குனர் ராஜிந்தர் குமாருக்கும் தொடர்பு இருப்பதற்கு ஆதாரம் உள்ளது.எனவே, ராஜிந்தர் குமார் மற்றும் இதர உளவுப்பிரிவு அதிகாரிகள் மிட்டல், எம்.கே.சின்கா, ராஜீவ் வாங்கடே ஆகியோர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவடைந்த பிறகு, அவர்கள் 4 பேர் மீதும் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
குஜராத் போலீஸ் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது, மாநிலத்தில் ஆளும் நரேந்திர மோடி அரசுக்கு பின்னவடைவாகக் கருதப்படுகிறது. மேலும் இதுக்குறித்து டெல்லியில் சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், “”இஷ்ரத் ஜஹான் பயங்கரவாதி இல்லை. அவர் எந்த பயங்கரவாதச் செயலிலும் ஈடுபடவில்லை. ஜாவித் ஷேக் 2004இல் குஜராத் சென்றபோது, அவருடன் இஷ்ரத் ஏன் சென்றார் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டன. ஆனால், இஷ்ரத்துக்கு வேலைவாய்ப்பு அளித்தவர் ஜாவித் ஷேக். அதனால்தான் அவருடன் இஷ்ரத் சென்றார். இஷ்ரத்தின் குடும்பத்துக்கு நெருக்கடியான நேரத்தில் ஜாவித் உதவினார். மேலும் இந்த என்கவுன்ட்டர் நடப்பதற்கு முன்பே என்கவுன்ட்டர் தொடர்பான முதல் தகவல் அறிக்கையை குஜராத் போலீஸார் தயாரித்து விட்டதை எங்கள் புலன்விசாரணையில் கண்டறிந்தோம்” என்று தெரிவித்தன.
இந்நிலையில், குற்றப்பத்திரிகையில் ஐ.பி. அதிகாரி ராஜேந்தர்குமாரின் பெயர் இடம்பெறாதது வியப்பளிக்கிறது என்று என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ஜாவித் ஷேக்கின் வழக்குரைஞர் முகுல் சின்ஹா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அஹ்மதாபாத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “”இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபராக ராஜேந்தர்குமாரின் பெயரைச் சேர்க்காமல் தவிர்த்ததன் பின்னணியில் அரசியல் நெருக்கடி இருந்துள்ளது. அவரது பெயரை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடுவதோடு மட்டுமின்றி அவரைக் கைது செய்யவும் வேண்டும்” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment