Wednesday, July 3, 2013

இலங்கை:முஸ்லிம் விளையாட்டு மைதானத்தில் திடீரென முளைத்த புத்தர் சிலை!-நிலத்தை கைப்பற்ற திட்டமா?

கொழும்பு:இலங்கையின் மட்டக்களப்பு ஒட்டமாவடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் கல்வி நிலைய விளையாட்டு மைதானத்தின் நடுவில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பிரதேச முஸ்லிம்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
முழுமையாக முஸ்லிம்கள் மட்டும் வாழும் இப்பிரதேசத்திலுள்ள பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் கல்வி நிலையத்தின்  விளையாட்டு மைதானத்திலே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
மைதானத்தின் நடுவில் மேசையொன்றில் புத்தர் சிலை வைக்கப்பட்டு, நிழலுக்கு குடையொன்றும் நடப்பட்டுள்ளதை மறுநாள் காலையில் தாங்கள் கண்டதாகக் கூறும் பாடசாலை நிர்வாகம் வாழைச்சேனை காவல்துறையில் இது தொடர்பாக முறைப்பாடு
செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்றது.பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் கல்வி நிலையத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானம் வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரைக்கு சில மீட்டர் தொலைவில் உள்ளது. நில உரிமை தொடர்பாக ஏற்கனவே விகாராதிபதிக்கும் பாடசாலை நிர்வாகத்திற்குமிடையில் ஏற்கனவே முரண்பாடு இருந்துள்ளது.கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இந்நிலம் அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் சாதுவியா வித்தியாலயம் ஆகியவற்றினால் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக பாடசாலை வளர்ச்சி சங்கம் தெரிவித்துள்ளது.
2004ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம்திகதி அன்று விகாராதிபதி மைதானத்திற்குரிய எல்லை சுற்று மதிலை அகற்றி இந்த நிலம் விகாரைக்கு சொந்தமான நிலம் என்றும், வெளி ஆட்கள் விளையாடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே ஒரு தடவை அறிவித்திருந் நிலையில் நில உரிமை தொடர்பாக எழுந்த இந்தப் பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டது.
வாழைச்சேனை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இது குறித்த வழக்கொன்றில், இந்த நிலம், விளையாட்டு மைதானத்திற்குரிய நிலம் என்று தீர்ப்பளித்துள்ளது என்று கல்வி நிலைய வளர்ச்சி சங்கம் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment