Thursday, June 20, 2013

ஜியாவுல் ஹக் கொலை:ராஜா பய்யாவிடம் உண்மை கண்டறியும் சோதனை!


Kunda-murder-ca23670
லக்னோ:உத்தரப் பிரதேசத்தில் போலீஸ் அதிகாரி கொலை வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுவதற்கு முன்னாள் மாநில அமைச்சர் ராஜா பய்யா சம்மதம் தெரிவித்துள்ளார்.
போலீஸ் துணை கண்காணிப்பாளரான ஜியா உல் ஹக் கடந்த மார்ச் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மாநில உணவுத் துறை அமைச்சராக இருந்த ரகுராஜ் பிரதாப் சிங் என்கிற ராஜா பய்யாவின் தொகுதிக்கு உள்பட்ட கிராமத் தலைவர் கொல்லப்பட்டது பற்றி விசாரிக்க சென்றபோது, ஜியா உல் ஹக் சுடப்பட்டார். ராஜா பய்யாவுக்கு இதில் தொடர்பு இருக்கிறது என்று போலீஸ் அதிகாரி ஜியாவின் மனைவி குற்றம்சாட்டியதை தொடர்ந்து, ராஜா பய்யா தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கடந்த மே மாதம் 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் ராஜா பய்யாவிடம் சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டது. குற்றப்பத்திரிகையில் ராஜா பய்யாவின் பெயர் இடம்பெறவில்லை. அதே சமயம், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டுமென்று சிபிஐ தெரிவித்திருந்தது. அவருக்கு எதிராக நேரடியாக எந்த சாட்சியமும் இல்லாத நிலையில், இந்தக் கொலை தொடர்பாக முழு விவரங்களையும் கண்டறிய, அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான மனுவை லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. நீதிபதி மிர்ஸா ஸீனத் இதற்கான அனுமதியை செவ்வாய்க்கிழமை அளித்தார். ராஜா பய்யாவின் சம்மதத்துடன் உண்மை கண்டறியும் சோதனை நடத்தலாம் என்று நீதிபதி கூறினார். இந்நிலையில், சிபிஐயிடம் நான் ஏற்கெனவே கூறியதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த சோதனை அவசியம் என்று கருதினால் அதற்கு நான் சம்மதிக்கிறேன். எனக்கு எந்த கவலையும் இல்லை என்று ராஜா பய்யா தெரிவித்தார்.

No comments:

Post a Comment