பக்கங்கள்

Monday, June 10, 2013

லிபியா:வன்முறையாக மாறிய போராட்டம் – 31 பேர் பலி


_68062434_68062433
திரிபோலி:லிபியாவின் பெங்காசி நகரத்தில் குடிமக்கள் ஆயுத படை தலைமையகத்திற்கு வெளியே நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது.இச்சம்பவத்தில் 31 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
குடிமக்கள் படையை கலைக்க கோரி லிபியாவின் பெங்காசியில் உள்ள லிபியா ஷீல்ட் ப்ரிகேட் தலைமையகத்திற்கு
வெளியே போராட்டம் நடைபெற்றது.முஅம்மர் கதாபியை ஆட்சியில் இருந்து அகற்றுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது இப்படை.ஆனால், கதாபியின் ஆட்சி கவிழ்ந்த பிறகும் இப்படையினர் ஆயுதங்களை கைவிடவில்லை.பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியோடே தாங்கள் செயல்படுவதாக இவர்கள் கூறுகின்றனர்.
போராட்டம் அமைதியாக துவங்கியதாகவும், போராட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான மக்களிடம் ஆயுதம் ஏதும் இல்லை என்றும் நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். ஆனால், போராட்ட பேரணி எவ்வாறு வன்முறையாக மாறியது என்பது தெரியாது என்று அவர்கள் பி.பி.சியிடம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, லிபியா ஷீல்ட் ப்ரிகேட் பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியோடு இயங்குவதாகவும், இப்படை லிபியா ராணுவத்தின் ரிசர்வ் படை என்றும் ராணுவச் செய்தியாளர் அலி அல் ஷைபி கூறுகிறார்.
ஆயுதக்குழுக்களை கட்டுப்படுத்தக் கோரி இதற்கு முன்பும் லிபியா நகரங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன.ஆயுதக்குழுக்கள் அரசை மிரட்டி காரியம் சாதிப்பதாக எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கத்தாஃபி ஆட்சியில் பதவியில் இருந்த அதிகாரிகளுக்கு அரசியலில் தடை ஏற்படுத்துவது உள்ளிட்ட சில சட்டங்களை இயற்றக் கோரி ஏப்ரல் மாதம் தலைநகரில் சில அமைச்சக அலுவலகங்களை ஆயுதக்குழுக்கள் பல வாரங்கள் முற்றுகையிட்டிருந்தன.சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகே ஆயுதக்குழுக்கள் முற்றுமையை விலக்கின.

No comments:

Post a Comment