Saturday, February 9, 2013

அணுசக்தி:அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்தது ஈரான்!


டெஹ்ரான்:அணுசக்தி திட்டம் தொடர்பாக நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா விடுத்த அழைப்பை ஈரான் நிராகரித்துவிட்டது. அச்சுறுத்தி துப்பாக்கி முனையில் நிறுத்தும் பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயாரில்லை என்று ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்துல்லா அலி காம்னஇ தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து காம்னஇ கூறியது: “மேற்காசியாவில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட தோல்வியே பேச்சுவார்த்தைக்கு அவர்களை தூண்டியுள்ளது. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் எங்களுக்கு இல்லை. துப்பாக்கி முனையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றார்கள். தடை அறிவிப்பு வந்தவுடன் அழுத்தம் கொடுத்து தங்கள் வழியில் ஈரானை கொண்டுவர அமெரிக்கா முயலுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
இம்மாதம் நடைபெறும் உலக நாடுகளுடனான பேச்சுவார்த்தையை தவிர ஈரானுடன் தனியாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கடந்த சனிக்கிழமை அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். பைடனின் அறிக்கையை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸாலிஹி வரவேற்றிருந்தார். ஆனால், எண்ணெய் பணத்தை செலவழிப்பதை தடுக்க ஈரான் மீது நேற்று முன் தினம் அமெரிக்கா தடையை தீவிரப்படுத்தியது. இந்நடவடிக்கை ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், மின்சாரம் உள்ளிட்ட தேவைகளுக்காகவே அணுசக்தி திட்டம் என்று ஈரான் திட்டவட்டமாக கூறிவருகிறது.

No comments:

Post a Comment