புதுடெல்லி:சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து நன்கொடை பெற்றது தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஜனநாயக மறுசீரமைப்புக்கான தன்னார்வத் தொண்டு அமைப்பின் சார்பில் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், பிரிட்டனைச் சேர்ந்த வேதாந்தா குழும நிறுவனத்திடமிருந்து காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் நன்கொடை பெற்றுள்ளன. இதில் பல்வேறு சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதால் இதுகுறித்து சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளல் மற்றும் இந்தர்மீத் கவுர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த கட்ட விசாரணை மார்ச் 19ஆம் தேதி நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment