
மனாமா:பஹ்ரைனில் நடந்த ஜனநாயக போராட்டத்தின் 2-வது ஆண்டுவிழாவில் ராணுவத்துடன் நடந்த மோதலில் சிறுவன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். தலைநகருக்கு அருகே உள்ள அல் தஈஹ் கிராமத்தில் 16 வயதான ஹுஸைன் அல் ஜஸ்ரி என்ற சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இச்சம்பவத்தை உறுதிச் செய்த பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.
ஜனநாயக போராட்டத்தின் 2-வது ஆண்டு நிறைவையொட்டி பஹ்ரைனில் பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தினர். இவர்களை கலைக்கபோலீஸ் பல இடங்களில் கண்ணீர் புகையை பிரயோகித்தது. தஈஹில் 3 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பஹ்ரைனில் துவங்கிய மக்கள் எழுச்சிப் போராட்டம் இதுவரை தணியவில்லை. 80க்கும் அதிகமானோர் பலியானதாக இதுவரை கிடைத்த தகவல் கூறுகிறது.
அசம்பாவித சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த அரசு நியமித்த சுதந்திர கமிஷன், அமைதியாக நடந்த போராட்டம் கூட அடக்கி ஒடுக்கப்பட்டதாக கண்டறிந்தது. விசாரணை கமிஷனின் சிபாரிசுகளை நடைமுறைப் படுத்தியதாக அரசு கூறும் வேளையில், தாங்கள் இப்போதும் கொடுமை இழைக்கப்படுவதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். பிரச்சனைக்கு தீர்வு காண அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசிய அளவிலான பேச்சுவார்த்தைக்கு துவக்கம் குறித்துள்ளது.
No comments:
Post a Comment