
டெல்லி:பாஜக கூட்டணி சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும், இதை ஐக்கிய ஜனதா தளம் ஏற்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். இந்தக் கருத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று ஏற்கனவே ஐக்கிய ஜனதா தளத் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இந் நிலையில், யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஐக்கிய ஜனதா தளம் சவால் விட்டுள்ளது. நரேந்திர மோடியை ஏற்க வேண்டும் என்று கூறும் சின்ஹாவின் பாஜக பீகாரில் எங்கள் கட்சியுடன் அமைத்துள்ள கூட்டணியில் இருந்து விலகத் தயாரா?. பிகாரில் எங்களுக்குத் தந்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள சின்ஹா தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய ஜனதா தள செய்தித் தொடர்பாளரான தேவேஷ் சந்திர தாகூர். அதே போல அந்தக் கட்சியின் இன்னொரு தலைவரான அலி அன்வர் கூறுகையில், மோடி எதிர்ப்பு என்பது எங்களது கட்சியின் கொள்கை. யஷ்வந்த் சின்ஹா ஒன்றும் ஹெட்மாஸ்டரும் அல்ல, நாங்கள் அவரது மாணவர்களும் அல்ல என்றார்.
பாஜக கூட்டணியில் உள்ள முக்கிய மூன்று கட்சிகள் ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா மற்றும் அகாலி தளம் ஆகியவை. இதில் சிவசேனையும் மோடியை ஏற்க முடியாது என்று நேரடியாகக் கூறாமல், சுஷ்மா சுவராஜைத் தான் பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் என்று கூறி வருகிறது.
No comments:
Post a Comment