Saturday, January 26, 2013

வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு நிதின் கட்கரி மிரட்டல்!


நாக்பூர்:பாஜக ஆட்சிக்கு வந்தால் வருமான வரித்துறை அதிகாரிகளை யாராலும் காப்பாற்ற முடியாது என்று பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்கரி மிரட்டல் விடுத்துள்ளார்.
கட்சி நிகழ்ச்சி ஒன்றில் வியாழக்கிழமை பங்கேற்ற கட்கரி தொண்டர்களிடையே பேசியதாவது:
பாஜக தேசியத் தலைவராக, நான் கண்ணியத்தைப் பேண வேண்டியிருந்தது; சில கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு நடக்க வேண்டியிருந்தது. இப்போது நான் சுதந்திர மனிதன்.
காங்கிரஸ் மூழ்கும் கப்பல். எங்களின் கட்சி ஆட்சிக்கு வரும்போது, சிதம்பரமோ, சோனியா காந்தியோ அவர்களைக் (வருமான வரித்துறை அதிகாரிகளை) காப்பாற்ற முடியாது.
முதலில், சிபிஐ காங்கிரஸின் ஏவலாளியாகச் செயல்பட்டது. தற்போது, வருமான வரித்துறை அதிகாரிகள் காங்கிரஸின் கைப்பாவையாகச் செயல்படுகின்றனர்.
டெல்லி, புணே, நாகபுரியில் அமர்ந்து கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் எப்படி எனக்கெதிரான சதியில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியும். என் மீதும், பாஜக மீதும் அனுதாபம் கொண்ட, அத்துறையில் பணிபுரியும் சிலர் இதை என்னிடம் தெரிவித்துள்ளனர் என்றார் கட்கரி.
பூர்த்தி குழும நிறுவனத்துடன் தொடர்புள்ள 11 நிறுவனங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பாஜக தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பு இச் சோதனை நடத்தப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவுடன் பாஜக தலைவராக கட்கரி 2ஆவது முறையாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில், அவர் போட்டியிலிருந்து பின்வாங்கினார்.
காங்கிரஸில் மன்னராட்சி: அவர் மேலும் கூறியதாவது: காங்கிரஸில் மன்னராட்சி முறை நடக்கிறது. ஒருவர் மட்டுமே அங்கு தலைவர்; மற்றவர்கள் அடிமைகள்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, சமாஜவாதி தலைவர் முலாயம்சிங் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோரை சிபிஐ மூலம் மிரட்டி, மிரட்டல் பாணி அரசியலில் ஈடுபட்டு வருகிறது.
அரசியல் ஏற்றத்தாழ்வுகள் வாழ்க்கையின் ஒரு பகுதி. அவற்றால் நான் மனக்கலக்கம் அடைவதில்லை. மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்து கொண்ட பகுதியில் ஏழைகளுக்கு சமூக சேவை செய்து வருகிறேன். அதை மேலும் தொடருவேன் என்றார் கட்கரி.
இந்நிகழ்ச்சியில்,மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சுதிர் முங்கன்டிவார், நாகபுரி மேயர் அனில் சோலே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment