பக்கங்கள்

Saturday, January 12, 2013

ஆக்கிரமிப்பாளர் அட்டகாசம்!


நப்லஸ்: அண்மைக் காலமாக மேற்குக் கரைப் பிரதேசமெங்கிலும் சட்டவிரோத யூத ஆக்கிரமிப்பாளர்களின் அட்டகாசங்கள் அதிகரித்து வருவதாக உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, நப்லஸ் நகரை அடுத்துள்ள கஸ்ரா எனும் பலஸ்தீனக் கிராமம் யூத ஆக்கிரமிப்பாளர்களால் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது. அக்கிராமத்தில் பலஸ்தீன் விவசாயிகளுக்குச் சொந்தமான பயிர்நிலத்தில் 200க்கும் அதிகமான ஒலிவ மரங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் வெட்டித் தரித்துள்ளனர்.

"கஸ்ரா கிராமத்துக்குத் தெற்கே அமைந்துள்ள 'யாஷ் கொடிச்' எனும் சட்டவிரோதக் குடியிருப்பைச் சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்கள் இதுவரை பலஸ்தீன விவசாயிகளுக்குச் சொந்தமான 210 ஒலிவ மரங்களை அடாவடியாக வெட்டிச் சாய்த்துள்ளனர்" என, கஸ்ஸான் தஹ்லாஸ் எனும் பலஸ்தீன் அதிகாரி தெரிவித்துள்ளார்.  

பலஸ்தீன் வீடுகளைக் குறிவைத்துத் தாக்குவது, அவர்களுக்குச் சொந்தமான உடைமைகளுக்குச் சேதம் விளைவிப்பது, அவர்களின் பயிர் நிலங்களை அழித்து நிர்மூலமாக்குவது என சட்டவிரோத யூதக் குடியேற்றவாசிகளின் அடாவடித்தனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இரு தினங்களுக்கு முன் கஸ்ரா கிராமத்தைச் சேர்ந்த பலஸ்தீன் இளைஞன் மீது ஆக்கிரமிப்பாளர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

பலஸ்தீனர்களைப் பொருளாதார ரீதியில் ஒடுக்குவதும், அவர்களை அச்சுறுத்தித் தம்முடைய வாழிடங்களை விட்டும் வெளியேற நிர்ப்பந்திப்பதுமே இத்தகைய தாக்குதல்களின் பின்னணியில் உள்ள திட்டமாகும் எனக் கூறப்படுகின்றது.

இவற்றில் சில தாக்குதல்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் பாதுகாப்புடன் நடத்தப்படுவதுமுண்டு. 'ஆயுதங்களுடன் வலம்வரும் ஆக்கிரமிப்பாளர்கள், அப்பாவிப் பலஸ்தீன் பொதுமக்கள் மீது எந்த சந்தர்ப்பத்திலும் தாக்குதல் நடத்தத் துணிவதற்கு, ஆக்கிரமிப்பு இராணுவத்தின் பக்கபலமும் ஒரு காரணமாகும்' என பலஸ்தீன் மக்கள் அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றமை கவனத்திற் கொள்ளத்தக்கது.

No comments:

Post a Comment