
புதுடெல்லி:இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குஜராத் மாநிலம் கோத்ராவிலும் குண்டுவைக்க திட்டமிட்டனர் என்று தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது. 2006 மலேகான், 2007 மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய ஹிந்துத்துவா தீவிரவாதி டான்சிங் விசாரணையின் போது இதனை ஒப்புக்கொண்டுள்ளான்.
ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பாதுகாப்பு மையமாக விளங்கும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து டான்சிங், ராம்ஜி கல்சங்கரா, அஸ்வினி சவுகான் ஆகியோர் அடங்கிய கும்பல் கோத்ராவுக்கு புறப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பை நிகழ்த்தும் இடத்தை ஆராய்வதே அவர்களது நோக்கமாகும்.
மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்த புறப்படுவதற்கு முன்பாக ஒன்று கூடிய இந்தூரில் மானவ்தா நகரில் உள்ள அதே ப்ளாட்டில் இருந்து தான் கோத்ராவுக்கு புறப்பட்டுள்ளனர். மானவ்தாவில் உள்ள ப்ளாட்டில் வைத்து தன்னை கோத்ராவுக்கு செல்லுமாறு ராம்ஜி கல்சங்கரா கட்டளையிட்டதாக டான்சிங் என்.ஐ.ஏவிடம் தெரிவித்துள்ளான். ராம்ஜியும், அஸ்வினி சவுகானும் பைக்கிலும், டான்சிங் பேருந்திலும் கோத்ராவுக்கு சென்றுள்ளனர். டான்சிங்கை இந்தூர் பேருந்து நிலையத்தில் கொண்டுவிட்டதும் ராம்ஜி ஆவான்.
2006-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சம்பவம் நடக்கும் இடத்தை பரிசோதித்தது போலவே 2008 செப்டம்பரில் கோத்ராவுக்கு சென்ற ஹிந்துத்துவா தீவிரவாத கும்பல் ஆராய்ந்துள்ளது. அதிகமான ஆட்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக வருகை தரும் மஸ்ஜிதுகளைக் குறித்து இக்கும்பல் ஆராய்ந்துள்ளது. கோத்ரா பேருந்து நிலையத்திலும், சுற்று வட்டாரங்களிலும் சவுகான் மற்றும் ராம்ஜியை டான்சிங் சந்தித்தபோதும் பேசிக்கொள்ளவில்லை என்று டான்சிங் கூறியுள்ளான். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மஸ்ஜிதுகளை பார்வையிட்ட ஹிந்துத்துவா கும்பல் கோத்ராவில் இருந்து வெளியேறியுள்ளனர்.
2008 செப்டம்பர் 29 மலேகானிலும் மொடாஸாவிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோதிலும் ஏன் கோத்ராவில் குண்டுவெடிப்பை நிகழ்த்தும் திட்டத்தை ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைவிட்டனர் என்பது குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் தனியாக விசாரித்து வருகின்றனர்.
மலேகானிலும்,மொடாஸாவிலும் நடந்த குண்டுவெடிப்பில் ஒரேவகையான வெடிப்பொருட்களே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தடவியல் சோதனை அறிக்கை தெரிவிக்கிறது. 2006-ஆம் ஆண்டு குண்டுவெடிப்பை நிகழ்த்த மலேகானை தேர்ந்தெடுத்தது கொலைச் செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி என்று டான்சிங் கூறியுள்ளான். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சுனில் ஜோஷியை கொன்ற பிறகு ராம்ஜி ஹிந்துத்துவா கும்பலின் தலைவனாக மாறியுள்ளான். தற்போது ராம்ஜியும்,அஸ்வினி சவுகானும் தலைமறைவாக உள்ளனர்.
No comments:
Post a Comment