கெய்ரோ:ஃபலஸ்தீன் ஹமாஸ்-ஃபத்ஹ் இயக்கங்களின் தலைவர்கள் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் அதிபர் முஹம்மது முர்ஸி மத்தியஸ்தம் வகிக்க நல்லிணக்க பேச்சுவார்த்தையை நடத்தினர். 2011-ஆம் ஆண்டு உருவாக்கிய ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஃபத்ஹ் சார்பாக ஃபலஸ்தீன் ஆணைய தலைவர் மஹ்மூத் அப்பாஸும், ஹமாஸ் சார்பாக அரசியல் விவகார தலைவர் காலித் மிஷ்அலும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.
எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி முதன்முறையாக ஃபலஸ்தீன் தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு தலைமை வகிக்கிறார். ஒப்பந்தத்தின் முக்கிய பகுதிகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஐக்கிய அரசை உருவாக்குதல், அதன் மூலம் பாராளுமன்ற-அதிபர் தேர்தல்களை நடத்துதல் ஆகிய காரியங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். 2006-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஹமாஸ் பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து இரு பிரிவினர் இடையே மோதல் வலுத்தது. ஃபத்ஹ் இயக்கத்தினர் காஸ்ஸாவில் பேரணியை நடத்த ஹமாஸ் அனுமதி அளித்ததும், ஹமாஸ் இயக்கத்தினர் மேற்கு கரையில் பேரணியை நடத்த ஃபத்ஹ் அனுமதி அளித்ததும் இரு தரப்பினர் இடையேயான நல்லிணக்கம் உருவாவதன் அடையாளமாகும்.
காஸ்ஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக எகிப்தின் உளவுத்துறை தலைவருடன் காலித் மிஷ்அல் பேச்சுவார்த்தை நடத்தினார்.
No comments:
Post a Comment