பக்கங்கள்

Monday, January 28, 2013

தனித் தெலங்கானா அறிவிப்பு வரும் வரை போராட்டம் தொடரும்! – தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு


pro-telangana
ஹைதராபாத்:தெலுங்கானா மாநில அறிவிப்பு வரும் வரை தெலங்கானா கூட்டு நடவடிக்கைக் குழுவினரின் போராட்டம் தொடரும் என்று தெலங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ராமராவ் கூறியுள்ளார்.
தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ராமாராவ் இதனைத் தெரிவித்தார். போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
முன்னதாக ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டியுடன், கல்வியாளர் சுக்கா ராமையா நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் இந்திரா நகர் பூங்காவில் அமர்ந்து போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. தெலங்கானா கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் 36 மணி நேர போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஹைதராபாத்தில் உள்ள இந்திரா பூங்காவில் போராட்டம் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த பகுதியில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. மேலும் இந்திரா பூங்காவிற்கு செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு போராட்ட குழுவினர் மற்றும் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் அவர்கள் மீது கண்ணீர்புகை வீச்சு உள்ளிட்ட நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றதால், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராமாராவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். தனித் தெலங்கானா தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் ஆந்திர மாநில அனைத்துக் கட்சி தலைவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பிரச்னையில் ஒரு மாதத்திற்குள் முடிவு அறிவிக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. கால அவகாசம் முடிய உள்ளதால், தெலங்கானா கூட்டு நடவடிக்கைக்குழு மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளது.
தனித் தெலங்கானா கோரி போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் மற்றும் தலைவர்களோடு கலந்து ஆலோசித்த பின்பே முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார். பாரதிய ஜனதாக் கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், உடனடியாக தனித்தெலங்கானா உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இந்த விஷயத்தில் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment