பமாகோ:இஸ்லாமிய போராளிகள் மீது தாக்குதலை தொடர்ந்துள்ள மாலி ராணுவம், சாதாரண மக்களை கூட்டுப் படுகொலைச் செய்வதாக செய்தி வெளியாகியுள்ளது.மத்திய நகரான ஸெபாரியில் ராணுவ முகாமிற்கு அருகில் 11 பேர் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். நகரத்தின் மருத்துவமனையிலும் கொல்லப்பட்ட சாதாரண மக்களின் உடல்கள் இருப்பதாக உள்ளூர் ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி இண்டர்நேசனல் பெடரேசன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் லீக் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
ஸிரிபாலாவில் 20 பேரை கொலைச் செய்த ராணுவம் இறந்த உடல்களை கிணற்றில் வீசியுள்ளது. ஏராளமானோரை காணவில்லை.போராளிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி இவ்வளவு நபர்களை ராணுவம் கொலைச் செய்ததாக மனித உரிமை அமைப்பு கூறுகிறது. நியோனோவில் துவாரிக் பழங்குடி இனத்தைச் சார்ந்த இரண்டுபேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஸிரிபாலா கிராமத்தில் இரண்டு பேரை கொலைச்செய்த சம்பவத்திற்கு சாட்சிகள் இருப்பதாக ஹியூமன்ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.
ஏராளமான பெண்கள் வன்முறைக்கு இரையாகியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்தவேண்டும் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், இக்குற்றச்சாட்டுக்களை மாலி ராணுவம் நிராகரித்துவிட்டது.ஏதேனும் ராணுவ வீரன் குற்றம் செய்திருந்தால் சட்டத்தின் முன்னால் கொண்டுவருவோம் என்று ராணுவ தலைவர் ஜெனரல் இப்ராஹீம தாஹிரு திம்பலி கூறியுள்ளார்.
அதேவேளையில், ராணுவத்தினருக்கு எதிராக போராடி வரும் அன்ஸருத்தீன் போராளி குழு இரண்டாக பிரிந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஒரு பிரிவு அறிவித்துள்ளது. மாலியின் வடக்கு பகுதி அன்ஸருத்தீனின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாலி-பிரான்சு-ஆப்பிரிக்க ராணுவத்தினர் மத்திய பகுதியை நோக்கி நகர்ந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து 1000 ராணுவத்தினர் மாலிக்கு வந்துள்ளனர்.
No comments:
Post a Comment