Saturday, January 12, 2013

48 ஈரானியர்களை சிரியா போராளிகள் விடுவித்தனர்!


Syrian rebels release 48 Iranians
டமாஸ்கஸ்:சிரியாவில் எதிர்ப்பு படையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் பிணைக்கைதிகளாக பிடித்த 48 ஈரானியர்களை விடுவித்துள்ளனர். ஈரான் புரட்சிப் படையின் உறுப்பினர்களும் இதில் அடங்குவர். டமாஸ்கஸில் உள்ள ஷியா புண்ணிய ஸ்தலத்திற்கு வருகைத் தந்த இவர்களை சிரியா எதிர்ப்பு போராளிகள் பிணைக் கைதிகளாக பிடித்தனர்.
ஈரான் கூறுவதுபோல இவர்கள் புனித யாத்ரீகர்கள் அல்லர் என்று சிரியா போராளிகள் கூறுகின்றனர். விசாரணையின் போது ராணுவ ஆவணங்கள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன. ஈரானியர்களுக்கு பதிலாக அரசு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளை விடுதலைச் செய்துள்ளது. ஈரானியர்களின் விடுதலைக்காக துருக்கியும், கத்தரும் ஏற்கனவே மத்தியஸ்தம் வகித்தன.
அதேவேளையில் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சிரியா வெளியுறவுத்துறை அமைச்சர் உம்ரான் அல் சுஐபி கூறியுள்ளார். தேசிய நல்லிணக்க பேச்சுவார்த்தையில் எதிர்ப்பாளர்கள் பங்கேற்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, ஆஸாதிற்கு பிந்தைய சிரியாவின் எதிர்காலம் குறித்து விவாதிக்க எதிர்கட்சி தலைவர்களின் 2 தின கூட்டம் பிரிட்டனில் துவங்கியுள்ளது. இத்லிப் மாகாணத்தில் நேற்று 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ராணுவ ஹெலிகாப்டரை எதிர்ப்பாளர்கள் சுட்டு வீழ்த்தினர். சிரியா அகதிகள் தங்கியிருக்கும் ஜோர்டான் நாட்டுப் பகுதியில் பலத்த காற்று வீசுகிறது. பல கூடாரங்களும் சரிந்துவிட்டன. 3 நாட்களாக கனத்த மழை பெய்தது. பெரும்பாலான அகதிகள் முகாமிலும் சகதி நிறைந்து சிரியா மக்களின் வாழ்க்கையை துயரமாக்கியுள்ளது.

No comments:

Post a Comment