Wednesday, January 16, 2013

ஈராக்கில் 335 சிறைக்கைதிகள் விடுதலை!

பாக்தாத்: அரசு எதிர்ப்பார்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான சிறைக்கைதிகளை விடுவிப்பது குறித்து  ஈராக் அரசு பரிசீலித்து வருகிறது. கடந்த ஒருவாரத்தில் 335 கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வளவுபேரையும் வழக்கு பதிவுச் செய்யாமல் சிறையில் அடைத்ததற்கு துணை பிரதமர் ஹுஸைன் அல் ஷாஹ்ரிஸ்தானி வருத்தம் தெரிவித்துள்ளார். சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பிரதமர் நூரி அல் மாலிக்கிற்கு எதிரான எதிர்ப்புகளை தணிப்பதற்காக கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்களை சுன்னி முஸ்லிம்கள் மீது அரசு பிரயோகிப்பதாக எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நிரபராதிகளை சிறையில் அடைத்தது குறித்து வருத்தம் தெரிவித்த துணை பிரதமர், பல்வேறு நாடுகளில் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன.திடீரென யாரையும் கைதுச் செய்யக்கூடாது. ஆனால், குற்றவாளிகளை சும்மா விடக்கூடாது என்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார். வயோதிகர்களும், பெண்களும் நேற்று விடுதலைச் செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.ஆனால், குற்றம் சுமத்தாமல் சிறையில் அடைத்தவர்களின் முழு விபரங்களையும் அரசு வெளியிடவில்லை. மர்மமான முறையில் காணாமல் போனவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சுன்னி முஸ்லிம் தலைவர்கள் கூறுகின்றனர்.
கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஈராக்கில் சுன்னி முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்தன. மத்திய நகரமான ஸமராவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நேற்று நடந்தது. பாக்தாதில் இருந்து சிரியாவுக்கும், ஜோர்டானிற்கும் செல்லும் முக்கிய நெடுஞ்சாலையை எதிர்ப்பாளர்கள் தடையை ஏற்படுத்தினர். சுன்னி முஸ்லிமான நிதியமைச்சர் ரஃபா அல் இஸ்ஸாவியின் மெய்க்காப்பாளர்களை கைதுச் செய்ததை தொடர்ந்து போராட்டம் துவங்கியது.
இந்நிலையில் அம்பர் மாகாணத்தைச் சார்ந்த சுன்னி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரான ஐஃபான் ஸஅதுன் மற்றும் அவரது மெய்க்காப்பாளர் ஃபலூஜாவில் நடந்த தாக்குதலில் பலியானார்கள்.கட்டிட தொழிலாளி என்று பொய்யாக கூறிய
நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிக்குண்டை வெடிக்கச்செய்ததில் இவர்கள் மரணமடைந்தனர்.

No comments:

Post a Comment