Wednesday, May 2, 2012

குடியரசு தலைவர் தேர்தல்: சுஷ்மாவுக்கு சரத் யாதவ் கண்டனம்!


Sharad punctures Sushma's trial balloon on Presidential candidate
புதுடெல்லி:குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக பா.ஜ.கவின் மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறிய கருத்துக்கள் பா.ஜ.கவின் கருத்தாகும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இதுக்குறித்து பேசப்படவில்லை என்று ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் பதவிக்கு ஹாமித் அன்சாரி தகுதியற்றவர் என்றும், குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி, ஹாமித் அன்சாரி நிறுத்தப்பட்டால் ஏற்கமாட்டோம், அப்துல் கலாமை சமாஜ்வாதி கட்சி ஏற்றால் நாங்களும் ஆதரிப்போம் என்று சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார்.
சுஷ்மாவின் உளறலுக்கு பதில் அளித்த சரத் யாதவ் கூறியது:
நாட்டின் அரசியல் நிலைமை மோசமாக இருக்கிறது, யாராக இருந்தாலும் பொறுப்புணர்வோடும் நிதானத்தோடும் கருத்து தெரிவிக்க வேண்டும்.
“குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்த கருத்துகள் உங்களுடைய (ஐக்கிய ஜனதா தளம்) கட்சிக்கு உடன்பாடானதா?’ என்று நிருபர்கள் தில்லியில் செவ்வாய்க்கிழமை கேட்டபோது, “அது அவருடைய கட்சியின் கருத்து” என்று நறுக்கு தெரித்தாற்போல் பதில் அளித்தார் சரத் யாதவ்.
தன்னுடைய கருத்துக்கு வலு சேர்க்க, சிரோமணி அகாலிதளக் கட்சியின் இளைய தலைவரான சுக்பீர் சிங் பாதல் கூறியதை சரத் யாதவ் மேற்கோள் காட்டினார்.
“இதுவரை இந்த விஷயம் தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பூர்வாங்க ஆலோசனைக் கூட்டம் கூட நடைபெறவில்லை என்பதால் இப்போதைக்கு என்னால் எதையும் கூற முடியாது” என்று சுக்வீர் சிங் பாதல் கூறியிருந்தார்.
அப்துல் கலாமை வேட்பாளராக ஏற்பீர்களா என்று நிருபர்கள் விடாமல் கேட்டபோது, “கூட்டணியின் கூட்டு முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள், உங்கள் கேள்விக்கு என்னால் இப்போது பதில் அளிக்க முடியாது” என்று சுக்வீர்சிங் பாதல் பதில் அளித்திருந்தார்.
“சமாஜ்வாதி கட்சியும் ஏற்கும் என்றால் கலாமை வேட்பாளராக ஏற்பதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை” என்று கூறியிருந்தார் சுஷ்மா.
“வேட்பாளர் யார் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் விவாதிக்கவில்லை, என்னுடைய ஐக்கிய ஜனதா தளக் கட்சியிலும் விவாதிக்கவில்லை. முதலில் நாங்கள் எங்களுக்குள் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தபிறகுதான் கூட்டணியிடம் ஆலோசனைக்குச் செல்வோம். சுஷ்மா சொல்லியிருப்பது அவருடைய கட்சியின் கருத்து. எங்களைத் தவிர வேறு எந்தக் கூட்டணிக் கட்சியையும் அவர் ஆலோசனை கலந்தாரா என்று எனக்குத் தெரியாது” என்றார் சரத் யாதவ்.
சுஷ்மா ஸ்வராஜின் பேட்டி காரணமாக கூட்டணியில் இனி கருத்தொற்றுமை காண்பது எளிதாக இருக்காது என்று இதிலிருந்து தெரிகிறது.

No comments:

Post a Comment