
வாஷிங்டன்:முஸ்லிம்கள் குறித்த தகவல்களை திருட்டுத்தனமாக கண்காணித்து சேகரித்த நியூயார்க் போலீசின் நடவடிக்கையை வெளிக்கொணர்ந்த அசோசியேட் ப்ரஸ்ஸிற்கு புலிட்ஸர் விருது வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஊடக துறையில் மிகச்சிறந்த பணி புரிவோருக்கு பத்தாயிரம் டாலர் மதிப்பிலான புலிட்ஸர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
நியூயார்க் போலீஸ் முஸ்லிம்களின் தகவல்களை சேகரித்தது குறித்த செய்தி வெளியானதை தொடர்ந்து அமெரிக்க காங்கிரஸ் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அசோசியேட் ப்ரஸ்ஸில் மாட் அபூஸோ, ஆடம் கோல்ட்மான், ஈலின் சுல்லிவான், கிறிஸ் ஹவுலி ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச விவகாரங்களுக்கான செய்திக்கு நியூயார்க் டைம்ஸின் ஜெஃப்ரி கெட்டில்மான் விருது பெற்றுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளை பிடித்து உலுக்கிய வறட்சி, கிழக்கு ஆப்பிரிக்காவின் கலவரம் ஆகியன குறித்த செய்திகள் கெட்டில்மானுக்கு விருதை பெற்றுத் தந்துள்ளது.
ஃபிடடெல்பியா என்க்வைட்டில் வெளியான நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்த செய்தியும் புலிட்ஸர் விருதுக்கு தேர்வுச் செய்யப்பட்டது.
புகுஷிமா அணுஉலை விபத்து நடந்த வேளையில் தவறுகளை மூடி மறைத்த ஜப்பான் அதிகாரிகளின் முயற்சிகள் குறித்து ’தி டைம்ஸ்’ இதழில் வெளியான செய்திக்கும் புலிட்ஸர் விருது கிடைத்தது.
அதேவேளையில் மிகச்சிறந்த தலையங்கத்திற்கு விருது வழங்க நடுவர்கள் மறுத்துவிட்டனர். பத்திரிகையாளர்கள், வல்லுநர்கள் அடங்கும் போர்டின் சிபாரிசின் அடிப்படையில் கொலம்பியா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் புலிட்ஸர் விருதை வழங்கி வருகிறது.
No comments:
Post a Comment