பக்கங்கள்

Wednesday, April 4, 2012

அமைதி திட்டம்:கால அவகாசம் – சிரியா அரசு ஒப்புதல்!


Syria accepts April 10 deadline for peace plan
டமாஸ்கஸ்:எதிர்ப்பாளர்களை அடக்கி ஒடுக்கும் சிரியா பஸ்ஸாரின் அரசு இம்மாதம் 10-ஆம் தேதிக்குள் ராணுவத்தை மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து வாபஸ் பெறுவது உள்ளிட்ட அரபுலீக்-ஐ.நா அமைதித்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக மத்தியஸ்தர் கோஃபி அன்னன் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் நடைபெறும் மோதலை முடிவுக்கு கொண்டுவர அமைதி திட்டங்களை அமல்படுத்த அந்நாட்டு அரசுக்கு கோஃபி அன்னன் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தார். கால அவகாசத்தை ஒப்புக்கொள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும் சிரியா அரசை வலியுறுத்த வேண்டும் என்று அன்னன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு ஆகிய நாடுகள் சிரியாவுக்கு எதிரான வரைவு தீர்மானத்தை நிறைவேற்ற தயாராகி வருவதாக அல்ஜஸீரா கூறுகிறது.
இதற்கிடையே, அன்னன் முன்வைத்த 6 அம்ச அமைதி திட்டத்தை அமல்படுத்துவதை கண்காணிக்க கண்காணிப்பாளர்களை அனுப்புவதற்கு முன்னோடியாக ஐ.நா அமைதிப்படை 48 மணிநேரங்களுக்குள் சிரியாவை அடையும் என்று அன்னனின் செய்தி தொடர்பாளர் அஹ்மத் ஃபவ்ஸி அறிவித்துள்ளார்.
அதேவேளையில், அமைதி திட்டங்களை நடைமுறைப்படுத்த கால அவகாசத்தை அங்கீகரித்த போதிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் ராணுவம் தீவிரமான தாக்குதலை நடத்தியுள்ளது. 65 உடல்களை பல்வேறு பகுதிகளில் இருந்து கண்டுபிடித்ததாக எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். எதிர்ப்பாளர்களின் தாக்குதலில் வடக்கு சிரியாவில் 3 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment