
காபூல்:ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ வீரன் ஒருவன் வெறித்தனமாக ராணுவ தளத்தின் அருகில் உள்ள 3 வீடுகளில் நுழைந்து சரமாரியாக சுட்டதில் 17 பேர் உயிரிழந்தனர். இதில் ஒன்பதுபேர் குழந்தைகளும், 3 பேர் பெண்களும் ஆவர். இச்சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆஃப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாயிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது அனுதாபம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
இச்சம்பவம் வேதனை மிக்கதும், அதிர்ச்சிகரமானதும் ஆகும். ஆஃப்கான் மக்களிடம் எங்களுக்கு மதிப்புள்ளது என்று ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க ராணுவ வீரன் நடத்திய கூட்டுப்படுகொலை மன்னிக்க முடியாதது என்று கர்ஸாய் கூறியுள்ளார். ராணுவ வீரன் கஸ்டடியில் இருப்பதாக கூறப்பட்டாலும் சம்பவத்தின் காரணம் குறித்து இதுவரை அமெரிக்க வட்டாரங்கள் வெளியிடவில்லை. தாக்குதலுக்கு பிறகு ராணுவ வீரன் தானே சரணடைந்துள்ளான். மூன்று வீடுகளில் நுழைந்து பிஞ்சுக் குழந்தைகள் உள்பட 17 பேரை கொடூரமாக சுட்டுத் தள்ளியுள்ளான்.
மனநோய் பீடித்த அமெரிக்க சாத்தான்கள் ஆஃப்கானில் இரத்த ஆற்றை ஓடச் செய்கின்றன என்று தாலிபான் குற்றம் சாட்டியுள்ளது. ஒவ்வொரு இரத்த சாட்சிக்கும் நாங்கள் பதிலடி கொடுப்போம் என்று தாலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment