
பெங்களூர்:திங்கள்கிழமை மாலைக்குள் பி.எஸ்.எடியூரப்பாவை முதல்வராக நியமிக்க பா.ஜ.க மத்திய தலைமை தயாராகவிட்டால் கூட்டாக ராஜினாமா செய்வோம் என்று பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் ஒரு குழுவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். எடியூரப்பாவிற்கு பதவி அளிக்காவிட்டால் மார்ச் 21-ஆம் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று எடியூரப்பாவின் ஆதரவாளர்களான 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் பா.ஜ.க மேலிடத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எடியூரப்பாவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 55 பேர் தற்பொழுது நகருக்கு வெளியே உள்ள ரிசார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 எம்.எல்.ஏக்கள் தங்களுடன் இணைவார்கள் என்று எடியூரப்பா தரப்பு கூறுகிறது. முதல்வர் பதவிக்காக டெல்லி சென்று மேலிட தலைவர்களை சந்திக்கும் முயற்சியை கைவிட்ட எடியூரப்பா ‘ரிசார்ட் அரசியலை’ துவக்கியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது சுரங்க முறைகேடு தொடர்பாக லோக் ஆயுக்த அறிக்கை தாக்கல் செய்தது. இதனையடுத்து அவரை முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டது. அவர்களிடம் சில நிபந்தனைகளை விதித்து தனது பதவியை அவர் ராஜிநாமா செய்தார்.
அதனையடுத்து கர்நாடக பாஜக இரண்டு பிரிவாக பிரிந்து ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், சதானந்தகவுடாவை ஒரு தரப்பினரும் ஆதரித்தனர். எடியூரப்பா ஆதரவாளர்கள் சதானந்தகவுடாவை ஆதரித்தனர். அவர் பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு பெற்று முதல்வரானார்.
இதனிடையே முறைகேடு தொடர்பாக சிறைக்குச் சென்ற எடியூரப்பா ஜாமீனில் விடுதலையானார். இந் நிலையில் அவர் மீது சுரங்க முறைகேட்டில் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனையடுத்து தன்னை மீண்டும் முதல்வர் ஆக்குமாறு கட்சி மேலிடத்தை எடியூரப்பா நெருக்கத் தொடங்கினார். ஆனால் எல்லா புகார்களிலிருந்தும் வெளிவந்த பிறகு உங்களை முதல்வராக்கலாம் என்று கட்சி மேலிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மார்ச் 21ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்களுக்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்து புகழ்பெற்ற எடியூரப்பாவிற்கு இது பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த பட்ஜெட்டை சதானந்த கவுடா தாக்கல் செய்வதில் எடியூரப்பாவிற்கு ஒரு சதவிகித அளவில்கூட விருப்பம் இல்லை என்றே கூறப்படுகிறது. எனவே ஒன்று முதல்வராக அமர்ந்து தான் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். அல்லது தனது ஆதரவாளர் ஒருவரை நிதி அமைச்சராக்கி பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்பதில் எடியூரப்பா பிடிவாதமாக உள்ளார்.
இந்நிலையில் பி.எஸ்.எடியூரப்பாவிற்கு உரிய பதவியை வழங்க தவறினால் பா.ஜ.கவில் பிளவு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று தும்கூர் மக்களவை எம்.பி பசவராஜ் மேலிடத்திற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
பெங்களூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை புதுதில்லி செல்வதாக இருந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனது பயணத்தை ரத்து செய்தார். கூட்டத்தில் அமைச்சர்கள் பசவராஜ் பொம்மை, சி.எம். உதாசி,ஷோபா கரந்தலஜே,முருகேஷ் நிராணி, சோமண்ணா, முன்னாள் அமைச்சர்கள் சி.சி.பாட்டில், லட்சமண் சவதி, கிருஷ்ணா பாளேமார், எம்எல்ஏக்கள் ஹரீஷ், பேலூர் கோபாலகிருஷ்ணா உள்பட 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு எம்பி பசவராஜ் கூறியது: முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு உரிய பதவி வழங்க வேண்டும் கடந்த ஒரு வாரமாக மேலிடத்தை வற்புறுத்தி வருகிறோம். ஆனால் இது குறித்து கட்சி மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. எடியூரப்பா பதவி விலகிய போது அவருக்கு கட்சி மேலிடம் சில வாக்குறுதிகளை கொடுத்தது. அதனை நிறைவேற்ற அது தவறிவிட்டது.
திங்கள்கிழமை மாலைக்குள் எடியூரப்பாவிற்கு உரிய பதவி வழங்காவிட்டால் பாஜகாவில் பிளவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. எனவே இதனை வலியுறுத்த 10 பேர் கொண்ட எம்பிக்கள் குழு திங்கள்கிழமை பாஜக மேலிட தலைவர்களை புதுதில்லியில் சந்திக்கும். அதன் பிறகும் மேலிட தலைவர்கள் மெளனமாக இருந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றார்.
No comments:
Post a Comment