Wednesday, March 14, 2012

கஸ்மியின் கைது:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம்!


kmsharif
புதுடெல்லி:மூத்த பத்திரிகையாளர் ஸய்யித் அஹ்மத் கஸ்மியை கைது செய்த நடவடிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.
டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பை ஈரானுடன் தொடர்புபடுத்த அமெரிக்காவும், இஸ்ரேல் இந்தியாவின் மீது கடுமையான அழுத்தம் கொடுப்பதாக நிலவிய ஊகம் வலுவடைந்துள்ளது என்று பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இஸ்ரேல் உளவுத்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் கஸ்மியை கைது செய்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
கஸ்மியிடம் விசாரணை மேற்கொள்ள மொஸாத் உள்ளிட்ட இஸ்ரேலிய ஏஜன்சிகளை அனுமதிக்கவேண்டும் என்பது தொடர்பாக வெளியான பத்திரிகை செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
இஸ்ரேலிய தூதரக கார் குண்டுவெடிப்பில் ஈரானுக்கு எவ்வித பங்குமில்லை என்று துவக்கத்தில் இந்தியா கூறியிருந்தது. ஆனால், பின்னர் இந்தியாவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம், நமது நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் இஸ்ரேலின் மோசமான செல்வாக்கை எடுத்து இயம்புகிறது என்று கே.எம்.ஷெரீஃப் கூறினார்.
ஈரானின் செய்தி நிறுவனமான இர்னாவுக்காக பணியாற்றிய சுதந்திர பத்திரிகையாளரான ஸய்யித் கஸ்மியின் கட்டுரைகள்தாம் அவர் மீது குறிவைக்கப்படுவதற்கு காரணம். இஸ்ரேலின் இனவெறி அரசியலை எதிர்த்து கட்டுரைகள் எழுதும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் கஸ்மியின் கைது மூலம் இஸ்ரேல் எச்சரிக்கையை விடுக்கிறது.
இஸ்ரேலுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் பத்திரிகை அறிக்கை வெளியிட்ட காரணத்தால் டெல்லி இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பின் பின்னணியில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்பட்டுள்ளதாக கடந்த சில தினங்களாக சில ஊடகங்கள் பரப்புரைச் செய்துவந்தன.நமது பாதுகாப்பும், இறையாண்மையும் ஆபத்தில் சிக்கும் விதத்தில் இஸ்ரேல் இந்தியாவில் தனது பிடியை இறுக்கி வருகிறது.
கஸ்மியின் கைது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அத்துமீறலாகும். ஏன் கஸ்மி கைது செய்யப்பட்டார் என்பதை போலீசார் விளக்கவேண்டும். எந்தவொரு அந்நிய நாட்டு ஏஜன்சியும் இந்தியாவின் மண்ணில் விசாரணை நடத்த அனுமதிக்க கூடாது. கஸ்மிக்காக போராட களமிறங்கிய பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை பாப்புலர் ஃப்ரண்ட் பாராட்டுகிறது. இவ்வாறு கே.எம்.ஷெரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment