
புதுடெல்லி:குஜராத் மாநிலத்தில் 2002-2006 காலக்கட்டங்களில் நடந்த 22 போலி என்கவுண்டர் படுகொலைகளை குறித்து விசாரணை நடத்தும் கண்காணிப்பு ஆணையத்தின்(monitorin authority) தலைவராக முன்னாள் நீதிபதி ஹெச்.எஸ்.பேடியை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
போலி என்கவுண்டர்களை குறித்த விசாரணையை கண்காணிக்கும் ஆணையத்திற்கு நீதிபதி ஹெச்.எஸ்.பேடி தலைமை வகிப்பார் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளான அஃப்தாப் ஆலம், ரஞ்சனா பிரகாஷ் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்தது.
மூன்று மாதங்களுக்குள் ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
வழக்குகளில் ஆணையத்துக்கு தேவையான உதவிகளை குஜராத் அரசு அளிக்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நியமனம் தொடர்பாக விளக்கம் அளிக்க குஜராத் அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் துஷார் மேத்தா அனுமதி கோரினார். ஆனால் அதை நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
முன்னர் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையத்தின் தலைவர் எம்.பி. ஷா பதவி விலகியபோது, உச்ச நீதிமன்றத்தைக் கலந்து ஆலோசிக்காமல் மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஆர்.வியாஸை நியமித்த மாநில அரசின் நடவடிக்கை அதிருப்தி அளிக்கிறது என்று உச்சநீதிமன்றம் மோடி அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. பின்னர் கே.ஆர்.வியாஸின் நியமனத்தை ரத்துச்செய்து ஆணையத்தின் தலைவராக நீதிபதி ஹெச்.எஸ்.பேடியை நியமித்து தற்போது உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment