கான்பூர்:தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஷஹ்லா மஸூதை கொலைச் செய்ய வாடகை கொலையாளிகளுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்பட்டதாக கைது செய்யப்பட்ட இர்ஃபானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி போபால் நகரில் தனது வீட்டிற்கு அருகே வைத்து ஷஹ்லா சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக போபாலை சேர்ந்த பெண் கட்டடக் கலை நிபுணர் ஷாஹிதா பர்வீஸ் என்பவரை சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ஷஹ்லா மீதான தனிப்பட்ட விரோதத்தால் அவரை கொலை செய்வதற்காக கூலிப் படையைச் சேர்ந்தவருக்கு பணம் கொடுத்ததாக ஷாஹிதா ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக உத்தரப் பிரதேச சிறப்புப் படை பிரிவினர் போபாலில் செவ்வாய்க்கிழமை இரவு, இர்ஃபான் என்பவரைக் கைது செய்தனர்.
கூலிப்படையைச் சேர்ந்தவர் என்று போலீஸாரால் கூறப்படும் இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், துப்பாக்கி சுடுவதில் வல்லவரான ஷானு அலுங்கா, போபாலைச் சேர்ந்த சலீம் ஆகியோருக்கு ரூ.3 லட்சம் கொடுத்து ஷஹ்லா மஸூதை கொன்றதை ஒப்புக்கொண்டதாக போலீசார் கூறுகின்றனர்.
இதில் ஷானு அலுங்கா கடந்த நவம்பர் மாதத்தில் நீதிமன்றத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர். சலீம் இப்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட இர்ஃபான், 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
இதனிடையே, இவ்வழக்கில் மத்தியபிரதேச மாநில மூத்த பா.ஜ.க தலைவரின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவரது பெயர் வெளியிடப்படவில்லை. ஷாஹிதாவுடன் தொடர்புடையவர் என்று சி.பி.ஐ வட்டாரங்கள் கூறுகின்றன. முன்னர் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஷாஹிதாவிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலும் ஒருவர் இவ்வழக்கில் கைது செய்யப்படுவார் என கருதப்படுகிறது.
No comments:
Post a Comment