
ரோம்:சோமாலியாவை பட்டினி மரணத்தை நோக்கி தள்ளிய வறட்சி காலம் முடிவுக்கு வருவதாக ஐ.நாசபை அறிவித்துள்ளது. பல நாட்களாக காத்திருந்த மழை பெய்யத் துவங்கியதை தொடர்ந்து சோமாலியாவின் நிலைமை முன்னேற்றம் அடைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. ஆயினும் இந்த ஆப்பிரிக்க நாட்டின் மீது கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என ஐ.நா கூறியுள்ளது.
மேம்பட்ட விவசாய விளைச்சலும், உலக நாடுகளின் அவசர உதவியும் சோமாலியாவை வறுமையின் பிடியில் இருந்து தப்பிக்க உதவியது என ரோமை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உணவு மற்றும் விவசாய அமைப்பு(FAO) தலைவர் ஜோஸ் க்ராஸியானா கூறியுள்ளார். ஆனால், மேலும் 3 மாதம் உதவி கிடைக்காவிட்டால் சோமாலியா மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் ஐ.நா சோமாலியாவை வறட்சி நாடாக அறிவித்தது. வறுமை தீவிரமானதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கென்யா மற்றும் எத்தியோப்பாவிற்கு புலன் பெயர்ந்தனர்.
உணவு மற்றும் விவசாய அமைப்பின் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் சோமாலியாவில் அவசர உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கை நான்கு மில்லியனில் இருந்து 2.34 மில்லியனாக குறைந்துள்ளது. இது மக்கள் தொகையின் 31 சதவீதமாகும். மீதமுள்ளோருக்கு உணவு பொருட்கள் தற்பொழுது கிடைத்து வருகிறது.
மழைக்காலம் தீவிரமடையாவிட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என க்ராஸியானோ சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment